டிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
டிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அடுத்தவர்களை போல நடித்து, கேலி செய்தும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்குவது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டு முடிவு எடுக்க உத்தரவிட்டது.
இதுபற்றிய வழக்கில் இதையடுத்து நீதிபதிகள், ‘டிக்-டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் சிறுவர், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யமாட்டோம் என உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றனர்.
இதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்த நிறுவனம் தரப்பில் உரிய உறுதிமொழி வழங்கப்பட்டது. இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘டிக்-டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
மேலும், சிறுவர், சிறுமியர் பங்கேற்ற வீடியோக்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்படாது என்று டிக்-டாக் நிறுவனம் அளித்த உறுதிமொழி மீறப்படும்பட்சத்தில், கோர்ட்டு தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் எச்சரித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கை இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 பேர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.
இதில், அனைத்து விவகாரங்களையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சிறந்த முறையில் விசாரணை மேற்கொள்ளும். இந்த வழக்கில் கருத்து சுதந்திரம், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விசாரணையை மேற்கொள்வதால் வழக்கை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறிய நீதிபதி அமர்வு, மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டது. இதனை தொடர்ந்து இந்த மனுவை டிக் டாக் செயலி நிறுவனம் திரும்ப பெற்று கொண்டது.
Related Tags :
Next Story