ரத்னகிரியில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு
ரத்னகிரியில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. 5 நாட்களாக விடாமல் கொட்டி தீர்த்த கனமழை மாநில தலைநகர் மும்பையை புரட்டி போட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணை இருக்கிறது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திவாரே அணை அடிவார பகுதியில் அக்லே, ரிக்டோலி, ஒவாலி, கல்வனே, நந்திவாசே உள்பட 7 கிராமங்கள் உள்ளன. தீவிரமடைந்து பெய்து வரும் பருவமழை காரணமாக திவாரே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக அணையில் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், அணையில் தண்ணீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அடுத்த சில நிமிடங்களில் திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறியதால், 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. இந்த துயர சம்பவத்தில் 23 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை வெள்ளம் அடித்து சென்றது. தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பகல் முழுவதும் மீட்பு பணி நடந்தது. இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மாயமான மற்றவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story