நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயருமா?


நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயருமா?
x
தினத்தந்தி 5 July 2019 5:30 AM IST (Updated: 5 July 2019 10:21 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2019–20–ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டைத்தான் கடந்த பிப்ரவரி 1–ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

2019–20–ம் நிதி ஆண்டின் முதல் 4 மாத காலத்துக்கு, அதாவது புதிய அரசு பதவி ஏற்று, முழு பட்ஜெட் தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நடைமுறையில் இருந்து வருகிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்த இடைக்கால பட்ஜெட் உதவியது.

இப்போது தேர்தல் நடந்து முடிந்து, பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30–ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019–20–ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.

பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார். இது அவரது முதல் பட்ஜெட் ஆகும்.

உலகின் 5–வது பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் 2024–ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக உருவாக வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்களை கொண்டதாக பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது ரூ.5 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக இருக்கிறவர்களுக்கு பொருந்தாது என தெரியவந்துள்ளது.

கடைசியாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, பாரதீய ஜனதா கட்சி முதலில் ஆட்சிக்கு வந்த 2014–ம் ஆண்டு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்து அனைவரும் ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளனர். இந்த 5 ஆண்டு காலத்தில் விலைவாசி விண்ணோடும், முகிலோடும் போட்டி போடுகிற அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இன்னும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்பது ஏற்புடையதாக இல்லை என்பது மாதச்சம்பளதாரர்களின் ஆணித்தரமான கருத்தாக அமைந்துள்ளது.

இந்த ரூ.2½ லட்சம் என்பதை இரு மடங்காக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனாலும், ரூ.2½ லட்சம் என்பது ரூ.3 லட்சம் என்ற அளவிலாவது உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருமான வரி சட்டம் பிரிவு 80–சியின் கீழ் அளிக்கப்படுகிற வரி விலக்கு வரம்பு ரூ.1½ லட்சமாக உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை செய்கிறபோது தனிநபர் சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கிறபோது அதை வளர்ச்சித்திட்டங்களுக்கு முதலீடாக பயன்படுத்த வழி பிறக்கும்.

பெற்றோர் கையில் போய்ச்சேருகிற சிறார்களின் (மைனர்) வருமானத்தில் ரூ.1,500 வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்த தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இது பற்றிய அறிவிப்பை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரியை மேலும் எளிமை ஆக்கி அதற்கான அறிவிப்பும் வெளியாகக்கூடும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், ஓய்வு பெறுகிறபோது மொத்த தொகுப்பில் 60 சதவீதத்தை ஒருவர் திரும்பப்பெறலாம். அதில் 40 சதவீதத்துக்கு வரி விலக்கு உண்டு. 20 சதவீதம் வரி விதிப்புக்கு உரியதாகும்.

இந்த பட்ஜெட்டில் 60 சதவீத தொகைக்கும் வரி விலக்கு அறிவிக்கப்படலாம்.

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் (வருமான வரி சட்டம் பிரிவு 80–டி) விலக்கு உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் என உயர்த்தப்படும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பொது பட்ஜெட்டுடன் ரெயில் பட்ஜெட்டும் இணைந்தே தாக்கல் ஆகும் என்பதால் ரெயில் கட்டணம், சரக்கு கட்டணம், முன்பதிவு கட்டணம், பிளாட்பார கட்டணம் உயர்த்தப்படுமா என்பதுவும் இன்றைய பட்ஜெட்டில் தெரியவரும். அதே போன்று புதிய ரெயில்கள் விடப்படுவது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம்.


Next Story