2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி


2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி
x
தினத்தந்தி 6 July 2019 3:45 AM IST (Updated: 6 July 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

2022-ம் ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:-

2022-ம் ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதனுடன் சார்ந்த துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரிய அளவில் முதலீடு செய்வோம். வாழ்க்கை நடத்துவதும், வணிகம் செய்வதும் விவசாயிகளுக்கும் எளிதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

விவசாயிகளின் விளைபொருட்களை தனியார் தொழில்முனைவோர் வாங்குவதை ஊக்குவிப்போம். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாயிகள் பலன் பெறுவதை அனுமதிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்வோம். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை இது உறுதி செய்யும்.

விவசாயிகள் நியாயமான விலை பெறுவதை வேளாண் உற்பத்தி வணிக கூட்டுறவு சட்டம் எந்த வகையிலும் தடுக்கக்கூடாது. புதிதாக 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். ‘பூஜ்ய பட்ஜெட் விவசாயம்’ என்ற புதுமையான விவசாயத்தை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம்.

சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏற்கனவே இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிமுறைகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்.

பருப்பு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற வைத்த விவசாயிகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியிலும் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம். இதன்மூலம் நமது இறக்குமதி செலவு குறையும்.

வேளாண்மை அமைச்சகத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை 78 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில், ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவற்றில் ரூ.75 ஆயிரம் கோடி நிதி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கும், ‘பசுமை புரட்சி’யின் கீழ், 18 விதமான மத்திய அரசு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story