பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ரொமாலி தாரா என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கி, அந்நாட்டு ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்ததாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் காயமுற்றனர். அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 1,248 முறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களால், இதுவரை 4 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் கூறினார். அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் 267 முறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story