உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சேர்ப்பு -யுனெஸ்கோ அறிவிப்பு


உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சேர்ப்பு -யுனெஸ்கோ அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 5:33 PM IST (Updated: 6 July 2019 5:33 PM IST)
t-max-icont-min-icon

உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்த்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அஜர்பெய்ஜானில் 43-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இதில், புதிதாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால நினைவு  சின்னங்கள், சரணாலயங்கள், நகரங்களை சுற்றுலா தலங்கள் பட்டியலில் இணைப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, பிரேசிலின் கடற்கரையோரம் உள்ள சிறிய நகரமான பராட்டி இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் பரப்பு மற்றும் சேரா டா பொக்கெய்னா மலைத்தொடருக்கு இடைப்பட்ட இந்த பகுதி கருஞ்சிறுத்தை, கம்பளி சிலந்தி குரங்கு உள்ளிட்ட அரிய வகை விலங்குகளுக்கு உறைவிடமாக இருப்பதே இதன் சிறப்பு.

ஈராக்கின் பழங்கால பாபிலோன் நகரமும் இந்த பாரம்பரிய சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த நகரத்தில் பழங்கால கோவில்கள், கோபுரங்கள் மற்றும் உலக அதிசயமான தொங்கு தோட்டமும் உள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெய்ப்பூர் கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட நகரம். ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தேர்வானது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூர் இந்தியாவின் மிக சிறந்த திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். புராதன நகரமாக இருந்தாலும் தற்போது ஜெய்ப்பூர் ஒரு பெருநகர நகரின் அனைத்து தேவைகளின் ஒரு பெரிய வணிக மையம் ஆகும்.

நகரின் கட்டுமான பணிகள் 1727 இல் தொடங்கப்பட்டது. பெரிய அரண்மனைகள், சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டி முடிக்க 4 ஆண்டுகள் எடுத்துகொள்ளப்பட்டது. நகரின் கட்டமைப்பு இந்திய துணை கண்டத்தில் மிகவும் மேம்பட்ட மற்றும் நிச்சயமாக சிறந்ததாக இருந்தது. 1876-​​ல் வேல்ஸ் இளவரசர் ஜெய்ப்பூரை பார்வையிட்டபோது, நகர் முழுவதும் சவாய் ராம் சிங் ஆட்சி காலத்தில் அவரை வரவேற்க இளஞ்சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது.

ஜெய்ப்பூர் இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் கல்வி இடமாகும். ஜெய்ப்பூரின் பல்வேறு கோட்டைகள் மற்றும் நினைவு சின்னங்களை  பார்வையிட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். உலகின் சிறந்த ஓட்டல்கள் சில இங்கே அமைந்துள்ளன. ஜெய்ப்பூர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலா தலமாக விளங்குகிறது.

Next Story