கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க.; மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரது ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜனதா காய்களை நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து, இதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர்.
பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர்.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இன்று இரவு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவுக்கு திரும்புகிறார்.
இந்த சூழலில் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வருகிற 12-ந்தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் அமைச்சர் பதவியை காங்கிரசிற்கு விட்டுக்கொடுக்க மதசார்பற்ற ஜனதா தளம் முன்வரும் என தகவல் வெளியானது. கர்நாடக ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றி விடாமல் தடுக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதல் மந்திரியாக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது எனக்கு தெரியாது. இந்த கூட்டணி அரசு தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். அரசு சுமுகமுடன் நடைபெற வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் எங்களை பிரிப்பதற்காக, ஊடகங்களுக்கு அளிக்கப்படும் அற்பத்தனம் நிறைந்த தகவல் என கூறினார். தொடர்ந்து அவர், ராமலிங்க ரெட்டி ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். பெங்களூருவில் மிக நீண்ட காலம் காங்கிரஸ் கோட்டையை அவர் தக்க வைத்துள்ளார். அவரது குறைகள் என்ன என அறிந்து, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story