காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்ற விமானம் பா.ஜனதா எம்.பி. நிறுவனத்திற்கு சொந்தமானது


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்ற விமானம் பா.ஜனதா எம்.பி. நிறுவனத்திற்கு சொந்தமானது
x
தினத்தந்தி 7 July 2019 1:45 PM GMT (Updated: 7 July 2019 1:45 PM GMT)

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்ற விமானம் பா.ஜனதா எம்.பி.யுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.



கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 118 எம்.எல்.ஏ.க்களை கூட்டணி கொண்டுள்ள நிலையில் ராஜினாமா ஏற்கப்பட்டால் அரசு பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு நட்சத்திர ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த எம்.எல்.ஏ.க்கள் சென்ற விமானம்  பா.ஜனதாவின் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகரின் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதற்கிடையே விமானம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது, அதனை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனம் தரப்பில் யார் விமானத்திற்கு முன்பதிவு செய்தார் என்ற தகவல் தர மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா சதிசெய்துள்ளது என காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டுகையில், எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என பா.ஜனதா கூறுகிறது. 


Next Story