கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா


கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா
x
தினத்தந்தி 8 July 2019 1:51 PM IST (Updated: 8 July 2019 1:51 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர் என சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் ஆவர்.

இந்த நிலையில், இந்த கூட்டணி கட்சிகளின் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.  இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுபற்றி மந்திரி சிவசங்கர ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி இடையே சில பிரச்சினைகள் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எம்.எல்.ஏ.க்களிடம் மேலிட தலைவர்கள் அமர்ந்து பேசினாலே பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சில எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இந்த கருத்தை தான் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், சில மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என கூறினார்.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் தன்னிச்சையாக ராஜினாமா செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

Next Story