குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்


குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மரண தண்டனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:–

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6–வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15–வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதிநிறுவன மோசடிகள்

நாட்டில் மக்கள் பல அங்கீகரிக்கப்படாத, முறைகேடான நிதி நிறுவனங்களில் (சீட்டு கம்பெனிகள்) பணத்தை டெபாசிட் செய்து பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை–2019’ என்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு சட்டமசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.

இதன்மூலம் நாட்டில் கள்ளத்தனமான டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் இந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவது, டெபாசிட் பணத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கும் இதில் வழிவகை காணப்பட்டுள்ளது.

கிராம சாலை திட்டம்

பஞ்சாபில் தனிநாடு கேட்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கமான அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (எஸ்.எப்.ஜெ) இயக்கம் தடை செய்யப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படுகிறது.

‘பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்–111’ தொடங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.80,250 கோடியில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். முக்கிய ஊரக இணைப்புகள், கிராம விவசாய சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவைகளை இணைக்கும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்படும்.

நதி நீர் பிரச்சினைகள்

13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து ‘பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைக்கான நிபந்தனைகள் சட்டம்–2019’ உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் வரை இந்த சட்டம் பொருந்தும்.

‘மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகள் (திருத்த) சட்டம்’ கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்று நீர் பிரச்சினைகளுக்கான இப்போதைய தீர்ப்பாயங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உரிய தீர்ப்புகளை பிறப்பிக்க வேண்டும். இது நீர் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்க உதவும்.

திருநங்கைகள் பாதுகாப்பு

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் கொண்டுவருவதற்கான பரிந்துரைக்கும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டமசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு அடைய வழிவகுக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை அந்தந்த துறையின் மந்திரிகள் கூட்டம் முடிந்த பின்னர் தெரிவித்தனர்.


Next Story