கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் பற்றிய வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியது.
இதில், சபாநாயகரின் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா? என சபாநாயகர் தரப்புக்கு நீதிபதி தரப்பு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ரமேஷ்குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நிச்சயமாக இல்லை. இரண்டு பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தொடங்கிய பொழுது அவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார். எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கறிஞர் முகில் ரோத்தகி கூறினார்.
இந்நிலையில், அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது. ராஜினாமா கடிதம் மீதான விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்ததுடன் இந்த விவகாரம் செவ்வாய் கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என்று கூறியது.
Related Tags :
Next Story