காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: அமர்நாத் யாத்திரை பாதிப்பு


காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: அமர்நாத் யாத்திரை பாதிப்பு
x
தினத்தந்தி 13 July 2019 4:36 PM IST (Updated: 13 July 2019 4:36 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோவிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 46 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.  பலத்த பாதுகாப்புடன் 12 பேட்ச்கள் சென்றுள்ளன.

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரில் இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.  தியாகிகள் தினத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், காஷ்மீரில் முழுஅடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்முவில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து, அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் புறப்பட்டுச் செல்லவில்லை.

காஷ்மீர் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய அப்துல் காதீர் 1931ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 22 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Next Story