மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிக்கை


மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2019 11:30 PM GMT (Updated: 13 July 2019 9:07 PM GMT)

கர்நாடக அரசை காப்பாற்றும் சமரச முயற்சிக்கு இடையே அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். அவர்கள் சட்டசபையில் எதிர்வரிசையில் இடம் ஒதுக்கக்கோரி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் பா.ஜனதாவின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதுதொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும், வருகிற 16-ந்தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியபோது முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்தார்.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தனித்தனி சொகுசு விடுதிகளில் (ரிசார்ட்டுகளில்) தங்கவைத்துள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் கூட்டணி கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர். ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முதல்-மந்திரி குமாரசாமியும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவில் எம்.டி.பி.நாகராஜ் ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். அவர் ராஜினாமா கடிதத்தை விரைவில் வாபஸ் பெறுவார் என தெரிகிறது.

4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸா?

எம்.டி.பி.நாகராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “நான் சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன். காங்கிரஸ் தலைவர்கள் என்னை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அதனால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். என்னுடன் சுதாகர் எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்தார். அவரை சந்தித்து பேசி இருவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

சுதாகர் எம்.எல்.ஏ.வை சித்தராமையா செல்போனில் தொடர்புகொண்டு, உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். அதனால் சுதாகரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவாரா? என்பது விரைவில் தெரியவரும். ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பேசியிருக்கிறார்கள். அதனால் அவர் நாளை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ரோஷன் பெய்க்கை சமாதானப்படுத்தும் முயற்சியை முதல்-மந்திரி குமாரசாமி மேற்கொண்டுள்ளார். அதனால் அவரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது. பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெறும் பட்சத்தில் கூட்டணி அரசின் பலம் 105 ஆக உயரும்.

மும்பையில் தங்கியுள்ள 13 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தி, ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

இதற்கிடையே பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவுடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

வாக்கெடுப்பு எப்போது?

நம்பிக்கை வாக்கெடுப்பு எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறும்போது, “குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமற்றது. கூட்டணி அரசு கவிழ்வது தவிர்க்க முடியாதது. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை திரும்ப அழைத்துவர சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story