4½ மாதங்களுக்கு பிறகு இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி


4½ மாதங்களுக்கு பிறகு இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி
x
தினத்தந்தி 17 July 2019 2:00 AM IST (Updated: 17 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

4½ மாதங்களுக்கு பிறகு இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தன் வான்வெளியை திறந்து விட்டது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

சரியாக 12 நாளில், பிப்ரவரி 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து அங்கு பாலக்கோட் உள்ளிட்ட இடங்களில் இருந்த ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து, பதிலடி கொடுத்தன. ஏராளமான பயங்கரவாதிகள் பலியாகினர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனடியாக தன் வான்வெளியை மூடியது.

பின்னர், பாகிஸ்தான் மூடிய வான்வெளியில் தெற்கு பகுதிகளுக்கான 2 தடங்களை மட்டுமே திறந்தது.

அதைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் அகற்றப்படுவதாக இந்திய விமானப்படை மே 31-ந் தேதி அறிவித்தது. ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளி திறக்கப்படாததால் இந்திய சிவில் விமான நிறுவனங்கள் பலன் அடைய முடியவில்லை. இதனால் இந்திய விமானங்கள் சுற்றிப்பறக்க நேரிட்டது.

கூடுதல் பயண நேரம், கூடுதல் எரிபொருள் செலவு காரணமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு பெருத்த நிதி இழப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ஏர் இந்தியா ரூ.491 கோடி, ஸ்பைஸ் ஜெட் ரூ.30.73 கோடி, இண்டிகோ ரூ.25.10 கோடி, கோ ஏர் ரூ.2.10 கோடி இழப்பை சந்தித்தன.

இப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்துள்ளது.

இதையடுத்து இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தன் வான்வெளியை 4½ மாத இடைவெளிக்கு பின்னர் நேற்று அதிகாலை திறந்தது. முன்னதாக இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் பிறப்பித்தது.

அதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே வழக்கமான விமான போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

இது இந்திய சிவில் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. பயண நேரம் குறைந்துள்ளதால் பயணிகளுக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக இது அமைந்துள்ளது.


Next Story