வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்


வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்
x
தினத்தந்தி 17 July 2019 3:54 AM IST (Updated: 17 July 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு செலவின பார்வையாளராக முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி டி.முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் வருமான வரி டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியவர்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெரிய அளவில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் கமிஷன் தேர்தலை ரத்து செய்தது.

பணம் காரணமாக ஒரு தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்தது இதுவே முதல் முறை. தமிழ்நாட்டில் ஏற்கனவே 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் இதே காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

வேலூர் தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளரை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான டி.முரளிகுமார் சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே சென்னையில் வருமான வரி டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு 5-ந்தேதி ஓட்டுப்பதிவும், 9-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் மக்களவையின் மொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான 543 முழுமைபெறும். இவர்கள் தவிர ஆங்கிலோ-இந்தியர்கள் 2 பேர் நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Next Story