கர்நாடக சட்டசபை: விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது?... சபாநாயகர் திட்டவட்டம்


கர்நாடக சட்டசபை: விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது?... சபாநாயகர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 8:46 AM GMT (Updated: 2019-07-19T14:16:04+05:30)

கர்நாடக சட்டசபையில் விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது?... சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்டமாக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு

ஆளுநர் உத்தரவைத் தொடர்ந்து, இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்ற பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே, கர்நாடக சட்டப்பேரவை கூடியுள்ளது. அதேசமயம், பாரபட்சமற்ற முடிவு எடுப்பதற்கு உரிய காலஅவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இன்று மதியம் ஒன்றரை மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா முதலமைச்சர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு மேலும் குழப்பத்தை அதிகரித்த நிலையில், இரண்டாவது நாளாக கர்நாடக சட்டப்பேரவை முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. இன்றும் 20 எம்எல்ஏக்கள் அவைக்கு வரவில்லை. அவை தொடங்கியவுடன் பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், தமது பதவி முற்றிலும் சுயேச்சையானது என்றும், ஆளுநரும் தமக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறினார். எந்த பக்கத்திலிருந்து எந்த நெருக்கடிக்கும் பணிந்து முடிவெடுக்கப்போவதில்லை என்றும், பாரபட்சமற்ற முடிவு எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.

தம்மை நோக்கி வசைகளை வீசுபவர்கள், அவர்களது வாழ்க்கை எப்படிப்பட்டது என எண்ணிப் பார்க்க வேண்டும் என, குறைகூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் மறைமுகமாக சாடினார். தான் பிறரைப் போல லட்சக்கணக்கில் பணத்தை குவித்து வைத்திருக்கவில்லை என்பது தம்மைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என்றும், பாரபட்சமற்ற முடிவு எடுக்கக் கூடிய வலிமை தமக்கு உண்டு என்றும் கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, அரசை அகற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுவதாகக் அவர் குற்றம்சாட்டினார். 14 மாதங்கள் கழித்து இறுதிக் கட்டத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

2009ஆம் ஆண்டில் இதேபோன்ற நிலையை எடியூரப்பா எதிர்கொண்டபோது, மன்னிப்பு கேட்டு ஆட்சியைக் காப்பாற்றுமாறு, ரிசார்ட்டுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்களிடம் எடியூரப்பா கோரிக்கை விடுத்தார் என்றும், ஆனால் அப்படி தான் யாரையும் கெஞ்சவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

நான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முதல்வராக பதவியேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிகாரம் மற்றும் பதவி இன்று இருக்கும், நாளை இருக்காது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் சபாநாயகருக்கு தெரிய வேண்டும்,  ஆனால் அதுகுறித்து விவாதம் நடத்த பாஜகவினர் எதிர்க்கின்றனர் .எந்த எம்.எல்.ஏ.க்களையும் திரும்பி வாருங்கள் என அழைக்க போவதில்லை.

எந்த விவாதமும் வேண்டாம், வாக்கெடுப்புக்கு விடுங்கள் என எடியூரப்பா கூறுகிறார், ஆனால் இது வரலாற்றில் பதிவாக வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் புதிய அத்தியாயத்தை தொடங்கியது பாஜகதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை என்றும், இந்த அரசியல் கேலிக்கூத்தை சரிசெய்ய வேண்டிய தேவையிருக்கிறது என்றும் குமாரசாமி சாடினார்.

இதுகுறித்து விவாதித்த பிறகும்கூட எதிர்க்கட்சி ஆட்சியமைக்க முடியும், அதை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகூட செய்யலாம், ஒன்றும் அவசரமில்லை என குமாரசாமி குறிப்பிட்டார். அதிகார துஷ்பிரயோகத்தில் தாம் ஈடுபட்டு விடுவேனோ என்று அஞ்ச வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அவையை நடத்துவதில் சபாநாயகரின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், ஆளுநர் தமக்கு பிறப்பித்துள்ள உத்தரவு சரிதானா என்ற முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுவதாகவும் குமாரசாமி கூறினார்.

மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கர்நாடக ஆளுநர் விடுத்த காலக்கெடு நிறைவு.

பேரவை நடக்கும்போது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரமில்லை - கர்நாடக சட்ட அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா வாதம்.

ஆளுநரின் உத்தரவை சட்டப்பேரவையில் எடியூரப்பா சுட்டிக்காட்டி பேசினார்.

விவாதம் முடிந்த பிறகே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் கூறினார்.

Next Story