இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறேன்: எடியூரப்பா


இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறேன்: எடியூரப்பா
x
தினத்தந்தி 26 July 2019 5:13 AM GMT (Updated: 26 July 2019 5:13 AM GMT)

கர்நாடக முதல் அமைச்சராக 4-வது முறையாக இன்று எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்)  கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து  ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.

இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை முதல்-மந்திரி (பொறுப்பு) பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர். ஆட்சி அமைப்பது குறித்து மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா கூறிவந்தார். 

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ஆட்சி அமைக்க உரிமைகோர இருப்பதாக தெரிவித்தார். இதன்படி, ஆளுநர்  மாளிகை சென்ற எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  

ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா,  இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக பதவியேற்க இருப்பதாக தெரிவித்தார். எடியூரப்பா மட்டும் இன்று பதவியேற்பார் எனவும் அமைச்சர்கள் பதவியேற்பு மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Next Story