அயோத்தி விவகாரம்: சமரச குழு அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் இன்று விசாரணை நடைபெறுகிறது


அயோத்தி விவகாரம்: சமரச குழு அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் இன்று விசாரணை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 2 Aug 2019 9:14 AM IST (Updated: 2 Aug 2019 9:14 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி விவகாரம் தொடர்பான சமரச குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது பற்றிய வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. 

இதை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத்த நீதிபதிகள் அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தனர். 

இந்த குழு, 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், சமரச குழுவுக்கு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிவரை காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், சமரச குழுவால் இதுவரை இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், எனவே கோர்ட்டே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 11-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சமரச பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த அறிக்கையை கோர்ட்டு ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான விஷயத்தில் சமரச குழுவால் தீர்வு காணமுடியாத நிலை இருப்பதாக கருதினால், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை தினசரி விசாரிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சமரச குழு சுப்ரீம் கோர்ட்டில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதனை பரிசீலித்த நீதிபதிகள், சமரச குழுவின் நடைமுறைகள் ரகசியத்தன்மை கொண்டவை என்பதால் அறிக்கையில் உள்ள விவரங்களை தற்போது வெளியிட முடியாது என்றும், சமசர குழுவின் பேச்சுவார்த்தை தொடர்பான நிலை தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான சமரச குழுவின் நிலை தகவல் அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story