உன்னோவ் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு, பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை


உன்னோவ் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு, பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 4 Aug 2019 9:51 AM GMT (Updated: 4 Aug 2019 11:48 PM GMT)

உன்னோவ் பாலியல் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக சிறுமி தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையும் நடைபெற்றது.  

இதற்கிடையே போலீஸ் காவலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.  அவருக்கு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் சென்ற இருபெண்கள் உயிரிழந்தனர். வழக்கறிஞர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை சிபிஐயிடம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கடும் விமர்சனத்தை  முன்வைத்த சுப்ரீம் கோர்ட்டு, 7 நாட்களில் விசாரணையை முடிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டு விபத்தில் சிக்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் உ.பி.யில் பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்துக்கு பின்னால் பெரும் சதிதிட்டம் எதுவும் உள்ளதா? என்பதில் கவனம் செலுத்திவரும் சிபிஐ விசாரணையை தீவிரமாக மேற்கொள்கிறது. எம்.எல்.ஏ. செங்காருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் லக்னோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


Next Story