பிரியங்கா ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்வார் - மூத்த தலைவர் கரன்சிங் கூறுகிறார்


பிரியங்கா ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்வார் - மூத்த தலைவர் கரன்சிங் கூறுகிறார்
x
தினத்தந்தி 5 Aug 2019 3:48 AM IST (Updated: 5 Aug 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்வார் என மூத்த தலைவர் கரன்சிங் கூறினார்.

புதுடெல்லி,

ராகுல் காந்தி பதவி விலகலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பொறுப்பை இளந்தலைவர் ஒருவர் ஏற்க வேண்டும் என்று பஞ்சாப் காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி. ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

டெல்லியில் 10-ந் தேதி கூட உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய தலைவர் தேர்வு பற்றி விவாதிக்க உள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கரன்சிங், பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், “காங்கிரஸ் காரிய கமிட்டியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஒன்று கூடி, ராகுல் காந்தி விலகலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி விவாதித்து இருக்க வேண்டும். தலைவர் இல்லாமல் கட்சியை விட்டு விட முடியாது” என கூறினார். பிரியங்கா, காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று குரல் எழுந்து வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கரன்சிங், “இதில் பிரியங்காதான் முடிவு எடுக்க வேண்டும். அவர் தலைமை பொறுப்பை ஏற்றால் அதை வரவேற்பேன். அவர் கட்சியை ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்வார்” என கரன்சிங் பதில் அளித்தார்.

அத்துடன், “பிரியங்கா மிகவும் புத்திசாலிப்பெண். அவர் கட்சிக்கு தலைவரானால், அது தொண்டர்களுக்கு உத்வேகம் தரும். கட்சிக்கு அவர் சொத்தாக திகழ்வார்” எனவும் கூறினார்.


Next Story