காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் தகுதியானவர் - மிலிந்த் தியோரா சொல்கிறார்


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் தகுதியானவர் - மிலிந்த் தியோரா சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:15 AM IST (Updated: 5 Aug 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் தகுதியானவர் என மிலிந்த் தியோரா கூறினார்.

மும்பை,

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் அல்லது ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஆகியோர் தகுதியானவர்கள் என்று மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியதால், யாரை தலைவராக நியமிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கூறியதாவது:-

பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இளைஞராகவும், தேர்தல், நிர்வாகம், கட்சி அமைப்பு ரீதியான அனுபவம் ஆகிய தகுதிகளை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

சச்சின் பைலட் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருக்கு இந்த தகுதிகள் அனைத்தும் இருப்பதாக நான் கருதுகிறேன். கட்சிக்கு பலம் சேர்ப்பவர்களாகவும், எதிர்க்கட்சி என்ற நிலைமைக்கு உரிய வலிமை சேர்ப்பவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். குறைந்தபட்சம் ராகுல்காந்தி குடும்ப பின்னணியில், அவர்களை இடைக்கால தலைவராக நியமிக்கலாம்.

இவர்கள் தவிர வேறு யாரையாவது கட்சி தேர்ந்தெடுத்தாலும் அந்த முடிவை நான் மதிப்பேன். ஆனால் எனது கருத்தை கட்சியோ, மக்களோ ஏற்க மறுத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

நான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன். என்னுடைய பலமும், தகுதியும் எனக்கு தெரியும். கட்சியின் நலன்கருதி யாருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.

இந்தியாவின் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு உலகின் பெரிய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. மராட்டிய மாநிலம் உள்பட சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்னும் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் செய்தால் அது நமது வாய்ப்புகளை பெரிதும் பாதிக்கும்.

பிரியங்கா காந்தி தனிச்சிறப்பான தகுதிகள் பெற்றவர். ஆனால் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக கூறியிருப்பது காந்தி குடும்பத்தின் முடிவு. அதனை நாம் மதித்து செயல்பட வேண்டும். இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.


Next Story