காங்கிரசுக்கு தர்மசங்கடம்... சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் கொறடா ராஜினாமா...!


காங்கிரசுக்கு தர்மசங்கடம்... சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் கொறடா ராஜினாமா...!
x
தினத்தந்தி 5 Aug 2019 4:09 PM IST (Updated: 5 Aug 2019 4:38 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் கலிட்டா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்ட 370-வது பிரிவின் கீழ் சில சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த பிரிவை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். பா.ஜனதா பெரும்பான்மையாக இல்லாத அவையில் அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் கலிட்டா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது அக்கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சுரேந்திர நாகர், சஞ்சய் சேத் மற்றும் காங்கிரஸ் எம்.பி. புவனேஸ்வர் கலிட்டா ஆகியோர் ராஜினாமா வழங்கியுள்ளனர், அவை ஏற்கப்படுகிறது என கூறியுள்ளார். 

Next Story