370-வது பிரிவு நீக்கப்பட்ட செயல் காஷ்மீர் மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம் - உமர் அப்துல்லா குற்றச்சாட்டு


370-வது பிரிவு நீக்கப்பட்ட செயல் காஷ்மீர் மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம் - உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Aug 2019 3:52 AM IST (Updated: 6 Aug 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட செயல், காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்று உமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார்.

இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது, அதிர்ச்சி அளிக்கக்கூடியது. காஷ்மீர் மாநிலம், கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தபோது, இந்தியா மீது காஷ்மீர் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு மொத்தமாக துரோகம் செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தொடர்பான விதிமுறைகள், 370 மற்றும் 35ஏ பிரிவுகளில்தான் கூறப்பட்டுள்ளன. அந்த பிரிவுகளை நீக்கி இருப்பது, காஷ்மீர் இணைப்பு குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த முடிவு, சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

இந்த படுபாதகமான முடிவை எடுப்பதற்குத்தான், கடந்த சில நாட்களாக இந்திய அரசு, வஞ்சகமாக களத்தை தயார் செய்து வந்தது. காஷ்மீர் மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கும் எங்களைப் போன்றவர்கள், காவலில் வைக்கப்பட்ட னர். ஆனால், லட்சக்கணக்கான பாதுகாப்பு படையினர் தெருக்களில் குவிக்கப்பட்டனர்.

பெரிய அளவில் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என்று இந்திய அரசும், காஷ்மீரில் உள்ள அதன் பிரதிநிதிகளும் பொய் சொல்லி வந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்கள் அச்சம் உண்மையாகிவிட்டது.

இந்த முடிவு, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது, காஷ்மீர் மக்கள் மீதான அத்துமீறல் நடவடிக்கை. இதை தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

நீண்டகால, கடுமையான போராட்டம் காத்திருக்கிறது. அதற்கு நாம் தயாராவோம். இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.


Next Story