நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றிய நேருவின் உரை
1952-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி ஜவகர்லால் நேரு உரையாற்றினார்.
1949-ல் பிரதமர் ஜவகர்லால் நேரு, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் திவான் கோபால்சாமி அய்யங்காரிடம் (தஞ்சை தமிழர்) அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ காஷ்மீரின் மக்கள் தலைவர் சேக் அப்துல்லாவுடன் கலந்து பேசி உருவாக்குமாறு சொன்னார். அப்போதே சேக் அப்துல்லா இந்த அரசியல் சட்ட பிரிவை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றார். ராணுவம், வெளியுறவுத்துறை, ராஜாங்க பரிவத்தனைகள் ஆகியவை தவிர்த்து மற்ற அதிகாரங்கள் மாநிலத்திற்கு தரப்படுகிறது. அரசு உருவாக்கும் சட்டங்கள் எதுவானாலும் அது ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சரத்துகள் அந்த ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
“எனக்கு அரசியல் சட்டம் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அதுவல்ல விஷயம்! காஷ்மீர் மக்கள் வேண்டாம் என்றால் வேண்டாம் தான். ஏனெனில் வேறு என்ன மாற்று உள்ளது? மாற்று என்பது நிர்ப்பந்தமோ, வன்முறை வழியிலான நெருக்குதலோ அல்ல!
காஷ்மீருக்காக நாம் போர்க்களத்திலும் பார்த்துவிட்டோம். சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் சென்று பார்த்தாகிவிட்டது. ஆனால், நாம் இந்த போரை ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஆணும், பெண்ணுமாக உள்ள அவர்களின் இதயத்தையும், மனதையும் வென்றெடுப்பதில் காட்ட வேண்டும். நான் இந்த நாடாளுமன்றத்தில் மரியாதை கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு தீர்ப்பு என்பது நாடாளுமன்றத்திலோ, ஐநா சபையிலோ எடுக்கப்பட்டாலுமே கூட இறுதியாக காஷ்மீர் மக்களின் மனதால், இதயத்தால் ஏற்கப்பட வேண்டும். அதுதான் யாவற்றைக் காட்டிலும் முக்கியமல்லவா?”
-இது 1952 ஜூன் 26 மற்றும் ஆகஸ்டு 7-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஜவகர்லால் நேரு உரையாற்றியதன் சாராம்சமாகும்!
இதன் விளைவாகத்தான் ஜம்மு-காஷ்மீர் தனக்கென தனித்துவமான சிறப்பு அதிகாரங்களை கொண்ட மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. இப்படியாக தனி கொடி, இந்திய அரசுக்கு இணையான அந்தஸ்து கொண்ட மாநிலமாக 1952-ல் உருப்பெற்றது.
2015-ல் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் நமது உச்சநீதிமன்றம், “காஷ்மீருக்கான சிறப்பு உரிமை தரும் சட்டம் என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துதான் நீக்க முடியும்” என்றது.
ஆனபோதிலும் காலப்போக்கில் காஷ்மீருக்கான உரிமைகள் படிப்படியாக வாபஸ் வாங்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசின் சட்ட சரத்துகள் 97-ல் 94 காஷ்மீருக்கு பொருந்தும்படி ஆக்கப்பட்டுவிட்டது. அதேபோல மாநில அரசு அதிகாரத்தில் இருந்த 47-ல் 26 மத்திய-மாநில அரசின் பொதுபட்டியலுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது.
Related Tags :
Next Story