ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : 35 வருடங்களுக்கு முன் மாநிலங்களவையில் ஜெயலலிதா பேசியது என்ன?
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மாநிலங்களவையில் எழுப்பிய கோரிக்கையை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி உள்ளார்.
புதுடெல்லி
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, 1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். மாநிலங்களவையில் அவருக்கு அண்ணா அமர்ந்த 185-வது இருக்கை ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவையில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து சரளமாக மேற்கோள்களை எடுத்துக்காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மாநிலங்களவையில் 5 ஆண்டுகள் அவர் உறுப்பினராக இருந்தபோது காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களின் விவகாரங்கள் குறித்துப் பேசியிருந்தபோதிலும், தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்து அதிகமாகப் பேசினார். மாநில உரிமைகள், இலங்கை பிரச்சினை, கங்கை-காவிரி இணைப்புத் திட்டம், கைத்தறி நெசவாளர் பிரச்சினைகள், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசியுள்ளார்.
கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக மாநிலங்களவையில் ஜெயலலிதா எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு தற்போது விடையளித்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் 1984-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி பேசினார். கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு தற்போது விடையளித்திருக்கிறது. ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி மேற்கொண்ட முடிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பார் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
1984-ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா பேசுகையில், ’356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் மாநில அரசைக் கலைத்திருக்கிறீர்கள். இதே பிரிவின் கீழ் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்துவது என்பது இது முதல் முறையல்ல. அல்லது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே கடைசி முறையாகவும் இருக்கப்போவதுமில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு, இந்தச் சட்டம் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பில் இந்தச் சட்டம் இருக்கும் வரையும் இதைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது’’ எனப் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரில் 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்ததைக் கண்டித்து சுமார் 10 நிமிடங்கள் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் உரையாற்றிய ஜெயலலிதா, இறுதியில் தனது உரையை முடிக்கும்போது இரு கேள்விகளை முன்வைத்தார். அவரது அந்தக் கேள்விகள் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.
``எனக்கு இரு கேள்விகள் இருக்கின்றன. முதலாவதாக, ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவருவது தான் மத்திய அரசின் திட்டமா? இரண்டாவதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏன்? அதை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட வரையறைக்குள் ஏன் கொண்டுவரக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பினார். 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மாநிலங்களவையில் எழுப்பிய கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிறைவேற்றியிருக்கிறது. அவரால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story