காஷ்மீர் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் தலைவர் தடுமாற்றத்தால் அதிர்ச்சியான சோனியாகாந்தி...!


காஷ்மீர் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் தலைவர் தடுமாற்றத்தால் அதிர்ச்சியான சோனியாகாந்தி...!
x
தினத்தந்தி 6 Aug 2019 3:50 PM IST (Updated: 6 Aug 2019 3:50 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் பேசுகையில் தெரிவித்த கருத்தால் சோனியாகாந்தி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவ்விவகாரத்தில் தலைமையில்லாத காங்கிரஸ் கட்சியில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருதரப்பினர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் கட்சியின் கொறடா புவனேஸ்வர் காலிட்டா ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தற்கொலை செய்கிறது என விமர்சனம் செய்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் மத்திய அரசின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக இருக்கும் அதிர் ரஞ்சன் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர் ரஞ்சன், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மோடி அரசை கார்னர் செய்யும் விதமாக பேசுகையில் தடுமாறினார். அவர் பேசுகையில், “நீங்கள் (பா.ஜனதா) சொல்கிறீர்கள் ஜம்மு காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என்று. ஆனால் விவகாரம் 1948 முதல் ஐ.நாவால் கண்காணிக்கப்படுகிறது. இது உள்நாட்டு விஷயமா? சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டோம். அது ஒரு உள்நாட்டு விஷயம் அல்லது இருதரப்பு விஷயம்” என கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் இருதரப்பு விஷயம் என அவர் குறிப்பிட்டது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதா உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தனர். 

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கடும் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி ராகுலிடம் செய்கையால் பேசினார். “என்ன நடக்கிறது, அவர் என்ன சொல்கிறார்?,” எனக் கேள்விகளை எழுப்பினார். கட்சி தலைமைக்கு மாறான கருத்தினை அவர் பதிவிட்டதாக தென்பட்டது. அவருக்கு பின்னால் இருந்த ராகுல் காந்தியும் அதிர்ச்சியுடனே காணப்பட்டார். இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வியை எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இதில் என்ன? என்ற கேள்வியை எழுப்பினார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அவருடைய பேச்சு இடம்பெற்று இருந்தது.

16-வது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே மோடி தலைமையிலான அரசுக்கு பல்வேறு நிலைகளில் கடுமையான எதிர்ப்புகளை ஸ்திரமாக பதிவு செய்தார். இது பிற எதிர்க்கட்சிகளுக்கும் பலமாக இருந்தது. இப்போது தலைவராகிய அதிர் ரஞ்சன் பேச்சு அவையில்  கட்சியே ஆட்டம் காண வைத்துள்ளது.

Next Story