370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் - பரூக் அப்துல்லா பேட்டி


370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் - பரூக் அப்துல்லா பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2019 4:45 AM IST (Updated: 7 Aug 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என்று காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறினார்.

ஸ்ரீநகர்,

மத்திய அரசு 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது பற்றி காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் அவரது வீடு அருகில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கதவுகள் விரைவில் திறக்கும். எங்கள் மக்கள் வெளியே வருவார்கள், நாங்கள் எதிர்த்து போராடுவோம். நாங்கள் இந்த முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம். நாங்கள் துப்பாக்கி ஏந்தி ஓடுபவர்கள் அல்ல, குண்டு வீசுபவர்கள் அல்ல, கல் எறிபவர்கள் அல்ல, காந்தி வழியில் செல்பவர்கள், நாங்கள் அமைதியான தீர்வில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

அவர்கள் எங்களை கொலை செய்ய நினைக்கிறார்கள். நாங்கள் தயார், எனது மார்பு தயார், இங்கே சுடுங்கள். பின்னால் சுடாதீர்கள்.

பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை, அவர் சொந்த விருப்பம் காரணமாக வீட்டில் இருக்கிறார் என்று உள்துறை மந்திரி கூறியதாக அறிகிறேன். எனது வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு நிறுத்தப்பட்டுள்ளார். யாரும் வீட்டுக்குள்ளும் வரமுடியாது, வெளியேயும் போகமுடியாது. அப்படியிருக்க உள்துறை மந்திரி எப்படி பொய் சொல்கிறார்.

எனது வீட்டு கதவில் பெரிய தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது. நான் கதவை உடைத்துக்கொண்டு தான் இங்கு வந்து உங்களுடன் பேசுகிறேன்.

பிராந்தியங்களை பிரிப்பதன் மூலம் அவர்கள் (மத்திய அரசு) மக்களின் இதயங்களையும் பிரித்துவிட்டனர். அவர்கள் முஸ்லிம்களை ஒரு பக்கமும், இந்துக்களை ஒரு பக்கமும், புத்த மதத்தவர்களை ஒரு பக்கமும் வைக்க நினைக்கிறார்களா? இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? இது தான் இந்தியாவா என்ன? எனது இந்தியா அனைவருக்குமானது. மதசார்பற்ற தேசத்தை விரும்பும் அனைவரும் ஒற்றுமையை விரும்புபவர்கள் தான்.

உங்கள் உடல் வெட்டப்படுவதாக நீங்கள் உணரும்போது உங்களால் எப்படி சிந்திக்க முடியும். அனைத்துவிதங்களிலும் உடல் ஒருங்கிணைந்து இருக்கும்போது தான் எந்த தீயசக்தியையும் எதிர்த்து போராட முடியும். இந்த தேசத்துக்காக குரல் கொடுத்த மக்கள் இன்று எப்படி உணர்வார்கள் என்று சிந்தித்து பார்த்தீர்களா? இப்படி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்களே என்று தான் உணர்வார்கள்.

ஒரு சர்வாதிகார நிர்வாகம் தான் இப்படி செய்யும், ஜனநாயக நிர்வாகம் இதுபோல செய்யாது என நாங்கள் கருதுகிறோம். எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரியவில்லை. எழுத்துமூலம் உத்தரவு இல்லை என்றாலும் நாங்கள் வீட்டு காவலில் உள்ளோம். நாங்கள் சட்டத்தை நம்புகிறோம்.

ஏன் இது செய்யப்பட்டது? இதற்கு என்ன தேவை ஏற்பட்டது? 370-வது சட்டம் ஜனாதிபதி உத்தரவு அல்ல. அரசியல் சாசனம். இந்த செயல் அரசியல்சாசனப்படி நடைபெற்றது என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு முடியும் வரை உள்துறை மந்திரி ஏன் காத்திருக்கவில்லை. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.


Next Story