காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: 2 மாத ரகசிய நடவடிக்கை - சாதித்து காட்டிய அமித்ஷா


காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: 2 மாத ரகசிய நடவடிக்கை - சாதித்து காட்டிய அமித்ஷா
x
தினத்தந்தி 7 Aug 2019 5:00 AM IST (Updated: 7 Aug 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக, 2 மாத ரகசிய நடவடிக்கையின் மூலம் அமித்ஷா சாதித்து காட்டிய விவரம் வெளியாகி உள்ளது.


மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் முதல் 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து பட்டியலிட்டனர். அதில் முதலாவதாக இடம் பெற்றிருந்தது காஷ்மீர் பிரச்சினை தான். நாடு சுதந்திரம் அடைந்தது முதலே காஷ்மீர் பிரச்சினை என்பது நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது.

தேன் மீது ஆசை இருந்தாலும், தேன் கூட்டில் கை வைக்க பயப்படுவதுபோல், இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியாளர்களும் காஷ்மீர் விவகாரத்தில் கைவைக்க பயந்தனர். பூனைக்கு யார் மணியை கட்டுவது? என்ற காத்திருப்பில், இப்போது பா.ஜ.க. அதை நிறைவேற்றி இருக்கிறது. அதற்கு கடந்த 2 மாத காலமாக ரகசியமாக ‘மாஸ்டர் பிளான்’ போட்டவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.

மக்களவையில் பா.ஜ.க. வுக்கு மெஜாரிட்டி இருந்தபோதும், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லை. இதனால், எந்தவொரு மசோதாவையும் மாநிலங்களவையில் நிறைவேற்றுவது என்பது பா.ஜ.க.வுக்கு சற்று கடினமாகவே இருந்தது. அதனால், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் விவகாரத்தில் பா.ஜ.க. ஒவ்வொரு அடியையும் மெதுவாகவே எடுத்து வைத்தது. அதுவும் ரகசியமாக நடந்தது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டது, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் செயல்பட்ட ஒரு சிலர் தான். ஏற்கனவே, முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இது பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகமான அம்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த நிலையில் தான், ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா அறிமுகம் செய்தார். மேலும், அந்த ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மறு சீரமைப்பு மசோதாவையும் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கனகச்சிதமாக அமித்ஷா மேற்கொண்டார். இது தொடர்பாக அவர், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தவிர மாநிலங்களவையில் இந்த மசோதாவை எப்படி நிறைவேற்ற முடியும்? என்பது குறித்து மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கள நிலவரத்தை ஆராய்ந்தனர். இவர்களுடன் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த சி.எம்.ரமேசும் இந்தப் பணியில் இணைந்து செயல்பட்டார். இந்த 4 பேரும் தான் மாநிலங்களவை கட்சி தலைவர்களுடன், தீர்மானம் மற்றும் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு போதிய பலத்தை பெற பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த 4 பேருக்கும் மேலும் ஒரு பணியும் வழங்கப்பட்டிருந்தது.

அதாவது, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் போன்ற பா.ஜ.க.வுக்கு இணக்கமான கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களில் ஒருவரிடம் இதுகுறித்து விளக்கமாக கூற வேண்டும் என்ற பணியும் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், “காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க இருக்கிறது. அதை நிறைவேற்ற நீங்கள் உறுதியளிக்க வேண்டும்” என்று முன்கூட்டியே அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து சம்பந்தமான சட்ட வரைவை வடிவமைப்பதில் 2 பேர் தான் இருந்தனர். பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகிய 2 பேர் தான் அவர்கள். முத்தலாக் தடை சட்ட மசோதாவை ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது மத்திய அரசுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அப்போது, 99 பேர் ஆதரவாகவும், 84 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நூலிலையில் இந்த வெற்றி அமைந்திருந்தாலும், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 61 பேரும் வாக்களித்தனர்.

அதாவது, ஓட்டுகளை பெறுவதில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது, அமித்ஷாவை இன்னும் பலம் வாய்ந்தவராக வெளிப்படுத்தியது. அதாவது, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கு பல படிகள் உயர்ந்திருக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்றியது மட்டுமல்ல, பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் போன்றவற்றையும் கொண்டு வந்து நிறைவேற்றியதால் அமித்ஷாவை இந்துத்துவா அமைப்புகள் பாராட்டியுள்ளன. அந்த மசோதா நிறைவேறியதும் நாடாளுமன்றத்தில் அமித்ஷாவுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. சிலர் அவரை சர்தார் வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு பேசினார்கள். பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணியில் அல்லாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சியினர் கூட அமித்ஷாவை புகழ்ந்து தள்ளினர்.

பா.ஜ.க. தலைவர்கள் அமித்ஷா பற்றி பேசும்போது, “பா.ஜ.க. அல்லாத கட்சிகளை தன்னகத்தே பெற்றதும் அதன் மூலம் எதிர்க்கட்சியின் ஒற்றுமையை குலைத்ததும் அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டனர். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான தீர்மானத்தையும், மசோதாவையும் அறிமுகம் செய்த அமித்ஷா, அதில் விவாதிக்க வேண்டிய கருத்துகளை முன்கூட்டியே வடிவமைத்துக் கொண்டார். அதில் முக்கிய இடம் பிடித்தது, “தேசிய பாதுகாப்பும், தேசிய ஒற்றுமையும்” என்பது தான். பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி எப்படி கிடைத்தது என்றால், எப்போதுமே பா.ஜ.க.வை கடுமையாக சாடும் ஆம் ஆத்மி கட்சி கூட இந்த விவகாரத்தில் மகுடிக்கு மயங்கிய பாம்பாகிவிட்டது.

தற்போது, அமித்ஷா இந்துத்துவா தத்துவத்தின் சாம்பியனாக தூக்கி நிறுத்தப்பட்டுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்த நாட்களிலும் கூட, முக்கிய பிரச்சினைகளான ராமர் கோவில் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்றவற்றில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளை அவர் தான் மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களின் ஆதரவை பெற்று மாநிலங்களவையில் பெரும்பான்மையை பெற்றிருப்பது ஒரு சாதாரண நிகழ்வாக கருதமுடியாது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பா.ஜ.க. இன்னும் தன்னை அரசியலில் முன்னிலைப்படுத்தி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது” என்றனர்.


Next Story