ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்ளூர் மக்களிடம் கேட்டறிந்த அஜித் தோவல்


ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்ளூர் மக்களிடம் கேட்டறிந்த அஜித் தோவல்
x
தினத்தந்தி 7 Aug 2019 9:34 PM IST (Updated: 7 Aug 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்ளூர் மக்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேட்டறிந்தார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு , காஷ்மீர் பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றுள்ளார். கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து சட்டம் ஒழுங்கு நிலை பற்றி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் இன்று அஜீத் தோவல்  உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார்.  உள்ளூர் மக்களிடம் நிலமை குறித்து கேட்டறிந்த அஜித் தோவல், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் மக்களின் நலனே அரசின் பிரதான நோக்கம் எனவும் கூறினார். 

அங்குள்ள மக்களுடன் மிகவும் எளிமையாக நின்றபடி மதிய உணவையும் அருந்திய அஜித் தோவல், உங்கள் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எனவும் கேட்டார்.  அப்போது, உள்ளூர்வாசி ஒருவர், அனைத்தும் சுமூகமாக இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் பேசிய அஜித் தோவல், உங்களின் பாதுகாப்பும், நலனுமே எங்களுக்கு முக்கியம். உங்கள் வருங்கால சந்ததிகள் நலன் பற்றியே நாங்கள் சிந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். 

பின்னர் சோபியான் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும் அஜித் தோவல் சந்தித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளையும் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

Next Story