மராட்டியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 2:38 PM IST (Updated: 8 Aug 2019 2:38 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை மீட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழை காரணமாக வெள்ளத்தினால் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1.32 லட்சம் பேர் இருக்க இடமின்றி மாற்றப்பட்டுள்ளனர். கோல்காபூர், சங்கிலி மாவட்டங்கள் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சங்கிலி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை படகு மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்ட படகு ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலூஸ் தாலுகாவில் பராக்மானால் கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தனியார் படகில் 30 முதல் 32 பேர் பயணித்துள்ளனர். 

படகு திடீரென கவிழ்ந்ததில் 9 பேர் மூழ்கி பலியாகினர். 14, 15 பேர் கவிழ்ந்ததும் நீந்தி உயிர்பிழைத்தனர். மாயமானவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பராக்மானால் கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேற்கு மராட்டியத்தில் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனே, சாதாரா மற்றும் கோல்காபூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கிலி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணியில் இந்திய கடற்படையும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story