ஜம்மு காஷ்மீர்: படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்: பள்ளிகள் திறப்பு
காஷ்மீரில் சில இடங்களுக்கு தொலைபேசி, இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த மாநிலத்துக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு கடந்த 5-ந் தேதி திடீரென்று ரத்து செய்தது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் எனவும், லடாக் எனவும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், அந்த மாநில மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதளசேவை, செல்போன் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சில இடங்களில், தொலைபேசி சேவை, இணையதள சேவை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த ஏதுவாக மக்கள் நடமாட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜமா மசூதியில் இன்று தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனினும், நகரில் உள்ள பிற சிறிய மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாவிட்டால், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. உதாம்பூர் பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட 400-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story