வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; 7 பேர் சாவு - தமிழக தொழிலாளர்கள் உள்பட 40 பேர் கதி என்ன? அதிர்ச்சி தகவல்


வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; 7 பேர் சாவு - தமிழக தொழிலாளர்கள் உள்பட 40 பேர் கதி என்ன? அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2019 5:01 AM IST (Updated: 10 Aug 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 40 தொழிலாளர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவால் ஆலயம், மசூதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தனர். நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 40 தொழிலாளர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வயநாடு உள்பட 8 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல கேரள அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநில கடலோர பகுதிகளில் ராட்சத கடல் அலைகள் எழுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர், மாநில போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட ஏராளமான பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளும் நடக்கிறது.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வயநாடு மேப்பாடி பத்துமலையின் ஒரு பகுதியில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் அந்த பகுதியில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை மேப்பாடி பத்துமலை மலைப்பகுதியில் மண்ணுக்குள் புதைந்ததாக ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 7 பேரின் உடல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையே அடிக்கடி அந்த பகுதியில் நிலச்சரிவு நிகழ்ந்த வண்ணம் இருந்தன. எனவே அங்கு மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வசித்து வந்த 40 தேயிலை தோட்ட தொழிலாளர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து சிக்கி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் பரவியது. இங்கு தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்ததால் அவர்கள் குறித்த விவரங்களை முழுமையாக அறிய முடியவில்லை.

அந்த தொழிலாளர்களின் கதி என்னவென்றும் தெரியவில்லை. எனவே அங்கு ஒரே பதற்றமும், பீதியுமாக இருந்து வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஜோதியம்மா (வயது70) அடித்துச்செல்லப்பட்டு பலியானார். சின்னகானல் பகுதியில் மண்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் தமிழ்நாடு நாமக்கல்லை சேர்ந்த தோட்ட தொழிலாளி குமார்-நித்யா தம்பதியின் மகள் மஞ்சுஸ்ரீ(1½) இடிபாடுகளில் சிக்கி பலியானது. வெள்ளியாமாற்றம் பகுதியில் மண் சரிந்து வீடு சேதம் அடைந்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி மதுகுஷான்(26) பரிதாபமாக இறந்தார். மயிலாடும்பாறையில் வீடுகள் சேதம் அடைந்ததில் வனஜா(40), ராஜலட்சுமி(34) ஆகிய 2பெண்கள் காயம் அடைந்தனர்.

பலத்த மழைக்கு கம்பம்மெட்டு, பட்டுமலை, பெருந்தாவனம் உள்ளிட்ட 70 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு வரும் மதுரை-கொச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு தேனி, போடி, மதுரை, நெல்லை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மூணாறு, பூப்பாறை, அடிமாலி ஆகிய பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மறையூர்-மூணாறு சாலை மற்றும் பழனி, பொள்ளாச்சி உடுமலை, மறையூர் வழியாக மூணாறுக்கு வரும் வாகன போக்குவரத்தும் தடை பட்டுள்ளதால் மூணாறு தீவாக மாறியுள்ளது.

கேரளாவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்குள் பாய்ந்துள்ள நிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் நேற்று காலை 9 மணி முதல் மூடப்பட்டடு உள்ளது. வரும் ஞாயிறு மாலை 3 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை 315 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மட்டும் 9,951 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். நிவாரண முகாம்களில் 22 ஆயிரத்து 165 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளாவின் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story