காஷ்மீர் விவகாரம்: தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காஷ்மீர் விவகாரத்தில் தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகள், வதந்திகள் பரவலை தடுக்க தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத் தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. மாணவர்களின் தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வரும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் பொய்யான தகவலை எழுதிவருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் ஷீலா ரஷீத் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ள தகவலில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளை பரப்புகிறார்.
அவரை பலரும் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர். இந்தப் போலி செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும். இது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தூண்டுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153-ஏ, 504, 505 பிரிவுகளின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2002-இன் கீழ் வகுப்புவாத பகைமைகளை ரஷீத் தூண்டி வருகிறார். இவரது செயல்பாடுகளை முடக்கி இவர் கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் பொதுமக்களை துன்புறுத்துவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் ஷீலா ரஷீத் தெரிவித்திருந்தார். இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
Related Tags :
Next Story