பெண்ணை தர தரவென இழுத்து சென்று வெளியேற்றிய பெண்கள் விடுதி கண்காணிப்பாளரின் கணவர்


பெண்ணை தர தரவென இழுத்து சென்று வெளியேற்றிய பெண்கள் விடுதி கண்காணிப்பாளரின் கணவர்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:04 AM GMT (Updated: 19 Aug 2019 10:04 AM GMT)

சத்தீஸ்கரில் பெண்கள் விடுதி கண்காணிப்பாளரின் கணவர் ஒரு பெண்ணை ஒரு அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண்கள் விடுதி கண்காணிப்பாளர் சுமிலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், விடுதியை விட்டு வெளியேறும்படி  பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி உள்ளார்.  அந்த பெண் தனது மூன்று மாத குழந்தையுடன் கொரியா மாவட்டத்தின் ஜனக்பூர் தொகுதியில் உள்ள பர்வானி கன்யா விடுதியில் தஞ்சம் புகுந்து இருந்தார்.

இந்த நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற்ற,   சுமிலா சிங்கின்  கணவர் அந்த பெண் படுத்து இருந்த படுக்கையில் இருந்து தனது கையால் வெளியே இழுத்து வந்து உள்ளார். ரங்லால் வலுக்கட்டாயமாக அறைக்கு வெளியே இழுத்துச் செல்லும்போது அந்தப் பெண் மறுத்து தரையில் படுத்து கொள்கிறார். ரங்லால் அந்த பெண்ணை தர தரவென இழுத்து செல்கிறார். அந்த சமயத்தில் சுமிலா சிங் தனது கணவருக்கு அருகில் நிற்கிறார். ஆனால் அவர் அதை எதிர்க்கவில்லை.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்து உள்ளது.  ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜனக்பூர் காவல் நிலையத்தில் தம்பதியருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஆளும் காங்கிரஸின் குழுக்கள் அந்தப் பெண்ணைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் குறித்து விசாரித்தன.

இதை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் சுமிலா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். விடுதியில் புதிய கண்காணிப்பாளராக லீலாவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story