தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:15 PM GMT (Updated: 2019-08-20T03:45:12+05:30)

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில், தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் அய்யம்பாளையத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி அமைத்து அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது உதவியாளர் உள்ளிட்ட பலர் மீது கடந்த 2014-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை கடந்த 2015-ல் விடுவித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனு மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இதற்கு காரணமான அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை ஆகஸ்டு 19-ந்தேதிக்கு(நேற்று) ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு நேற்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் ஆதார ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு மனுவை தாமதமாக தாக்கல் செய்ய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் மேல்முறையீடு செய்ய கால தாமதம் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்பின்பு வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story