ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்தால் சர்ச்சை: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய மாட்டோம் - பா.ஜனதா உறுதி


ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்தால் சர்ச்சை: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய மாட்டோம் - பா.ஜனதா உறுதி
x
தினத்தந்தி 19 Aug 2019 10:28 PM GMT (Updated: 19 Aug 2019 10:28 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்தால் சர்ச்சை உண்டானநிலையில், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய மாட்டோம் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீடு முறை குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துகளால், கடந்த 2015-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார். இக்கருத்து, சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

“இது இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நடக்கும் திட்டமிட்ட சதி” என்று காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதற்கு பா.ஜனதா தரப்பில் அதன் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

சமூகநீதி பாதையில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு முறை தொடரும். அது ஒருபோதும் நிறுத்தப்படாது.

இடஒதுக்கீடு, தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடியும் உறுதியாக தெரிவித்துள்ளார். மோடி அரசு இருக்கும்வரை, இடஒதுக்கீட்டை வாபஸ் பெறுவது சாத்தியமற்றது.

ஆலோசனைகளும், விவாதங்களும் நடைபெறலாம். ஆனால், அதற்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட உள்ளதாக அர்த்தம் அல்ல. விவாதம் நடைபெற்றதால்தான், பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story