குலாம்நபி ஆசாத்தை விமான நிலையத்திலேயே மீண்டும் தடுத்து நிறுத்தினர் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்


குலாம்நபி ஆசாத்தை விமான நிலையத்திலேயே மீண்டும் தடுத்து நிறுத்தினர் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:59 AM GMT (Updated: 20 Aug 2019 9:33 PM GMT)

காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் விமான நிலையத்தில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டு, டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஜம்மு,

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் காஷ்மீர் மாநிலத்தில் முன்பு முதல்-மந்திரியாக இருந்தவர். தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற தலைவர்கள் காஷ்மீர் மாநிலத்துக்கு வருவதும் தடுக்கப்பட்டது.

ஏற்கனவே குலாம்நபி ஆசாத் கடந்த 8-ந் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றபோது அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். அதோடு டெல்லிக்கு அவரை திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று 2-வது முறையாக குலாம்நபி ஆசாத் ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

குலாம்நபி ஆசாத் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு ஜம்மு விமான நிலையம் வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அவரை கட்டாயப்படுத்தி மாலை 4.10 மணிக்கு டெல்லி திரும்பிய விமானத்தில் திருப்பி அனுப்பினர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரை அவரது வீட்டுக்கு செல்லவோ, மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவோ அனுமதிக்க மறுத்துள்ளனர். அவர் இந்த மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி, இந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்.

அப்படிப்பட்ட அவரை கடந்த 2 வாரங்களாக தனது சொந்த மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் இங்குள்ள சிலரை சந்தித்து மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து தெரிந்துகொள்ளவே இங்கு வந்துள்ளார். அவரை அனுமதிக்க மறுத்தது, தற்போதுள்ள நிலைமை குறித்து பேசவோ, விவாதிக்கவோ முக்கியமான தேசிய கட்சியையே அனுமதிக்க மறுத்ததை எடுத்துக்காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியோ, அதன் தலைவர்களோ பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் அல்ல. ஆனால் இந்த மாநில நிர்வாகம் அப்படி நடந்துகொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story