சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை - மத்திய அரசு புதிய அறிவிப்பு


சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை - மத்திய அரசு புதிய அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 9:48 PM GMT (Updated: 21 Aug 2019 9:48 PM GMT)

சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கைகளை அச்சிடுமாறு மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை வாசகம், பெரிய படங்கள், பழக்கத்தை கைவிடுவதற்கான உதவி தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவுப்படி ஏற்கனவே சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் புகையிலையின் தீமை குறித்து எச்சரிக்கை வாசகங்கள், புகைப்படங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.

2017-ம் ஆண்டு உலக புகையிலை தொடர்பான ஆய்வு அறிக்கையில், புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்கள் வெளியிடுவதால் 62 சதவீதம் சிகரெட் புகைப்பவர்கள், 54 சதவீதம் பீடி புகைப்பவர்கள், 46 சதவீதம் இதர புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் பழக்கத்தை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு இந்த எச்சரிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்காக சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (பாக்கெட் மற்றும் லேபிள்) சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கைக்கான பெரிய படங்கள், வாசகங்கள் மற்றும் புகையிலை பழக்கத்தை கைவிடுவதற்கு உதவும் தேசிய அளவிலான இலவச தொலைபேசி எண் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

வாசகம் ‘புகையிலை வலி நிறைந்த மரணத்தை தரும்’ என்பதாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். புகையிலை பழக்கத்தை கைவிடுவதற்கு உதவும் தொலைபேசி எண் 1800 11 2356 அட்டையில் அச்சிடப்பட வேண்டும். இதன்மூலம் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த பழக்கத்தை கைவிடுவதற்கான ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்கவும் முடியும்.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் உற்பத்தி சட்டப்படி பட்டியலிடப்பட்டுள்ள 2 எச்சரிக்கை படங்கள் 12 மாதங்களுக்கு ஒரு புகைப்படம் வீதம் 24 மாதங்களுக்கு சுழற்சி முறையில் வெளியிட வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story