தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது


தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது
x
தினத்தந்தி 2 Sep 2019 1:04 PM GMT (Updated: 2 Sep 2019 11:23 PM GMT)

அமெரிக்க பயணத்தின் போது தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பறைகளை ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 9 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நடத்தி வரும் அறக்கட்டளை சார்பில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த மாதம் அமெரிக்கா செல்லும் போது இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொள்வார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ‘பிரதமர் மோடியின் விடாமுயற்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளுக்காக மற்றுமொரு விருது கிடைத்து உள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தியர்களுக்கு மற்றுமொரு பெருமை மிகு தருணம் ஏற்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


Next Story