மேற்கு வங்காளத்தில் நடந்த முழு அடைப்பில் மீண்டும் வன்முறை மூண்டது - போலீஸ் அதிகாரி உள்பட 21 பேர் காயம்


மேற்கு வங்காளத்தில் நடந்த முழு அடைப்பில் மீண்டும் வன்முறை மூண்டது - போலீஸ் அதிகாரி உள்பட 21 பேர் காயம்
x

மேற்கு வங்காள பா.ஜனதா எம்.பி. தாக்கப்பட்டதை கண்டித்து பராக்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் போலீஸ் அதிகாரி உள்பட 21 பேர் காயமடைந்தனர்.

பராக்பூர்,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பராக்பூர் தொகுதிக்கு உட்பட்ட சியாம்நகரில் நேற்று முன்தினமும் இரு கட்சியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இதில் பராக்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி. அர்ஜூன் சிங் படுகாயமடைந்தார். அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலை கண்டித்து பராக்பூரில் பா.ஜனதாவினர் நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், சணல் தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. மேலும் பா.ஜனதா தொண்டர்கள் பல இடங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் சியால்டா பிரிவில் ரெயில் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த முழு அடைப்புக்கு திரிணாமுல் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பல இடங்களில் அந்த கட்சி தொண்டர்கள் திரண்டு வந்து கடைகளை திறக்க வலியுறுத்தினர். இதனால் பா.ஜனதாவினருக்கும், அவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதில் நோனா-சந்தன்புகுர் பகுதியில் நடந்த மோதலில் திதாகர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதைப்போல ஆங்காங்கே நடந்த மோதல்களில் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ஜனதா எம்.பி. தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முழு அடைப்பு நடந்த பராக்பூரில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜனதா எம்.பி. அர்ஜூன் சிங்கை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைப்போல பா.ஜனதா முன்னணி தலைவரான முகுல் ராயும் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது குற்றம் சாட்டினார். அர்ஜூன் சிங்கை கொலை செய்வதற்காக மம்தா பானர்ஜியின் திட்டமிட்ட சதி இது எனக்கூறிய அவர், இது தொடர்பாக முதல்-மந்திரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story