ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சி.பி.ஐ பதில் மனு
சிபிஐ காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 21-ந்தேதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந்தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2-ந்தேதி வரையும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் மனுதாரர் இடைக்கால ஜாமீனோ அல்லது போலீஸ் காவல் நீட்டிப்பு அல்லது பிற நிவாரணங்களையோ தனிக்கோர்ட்டை நாடி பெற்றுக்கொள்ளலாம்’ என கூறினர். மேலும் இந்த வழக்கை 5-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஏற்பதாக அவர்கள் அறிவித்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, ‘சி.பி.ஐ. காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளைக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிரான மனுவை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், எனவே தனிக்கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் காவலை மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கலாம் என்றும் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தனர்.
ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. நீதிமன்ற நடைமுறைகளை ப.சிதம்பரம் தரப்பு முறையாக பின்பற்றவில்லை. "சிதம்பரத்திற்கு சாதகமாக உத்தரவு கொடுத்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும்" ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என கூறி உள்ளது.
Related Tags :
Next Story