அமலாக்கத் துறையால் கைது: பா.ஜனதா நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறிய டி. கே. சிவகுமார்


அமலாக்கத் துறையால் கைது: பா.ஜனதா நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறிய டி. கே. சிவகுமார்
x
தினத்தந்தி 3 Sept 2019 10:51 PM IST (Updated: 3 Sept 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே. சிவக்குமார் பா.ஜனதா நண்பர்களுக்கு வாழ்த்துகள் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

இதையடுத்து,  கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

இந்நிலையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமார் தனது டுவிட்டரில், “என்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பா.ஜனதா நண்பர்களுக்கு வாழ்த்துகள். அரசியல் காரணங்களுக்காக வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் என் மீது வழக்குகள் போட்டுள்ளன. பா.ஜனதாவின் வெறுப்பு மற்றும் பழிதீர்க்கும் அரசியலுக்கு நான் பலியாகி உள்ளேன். சட்டத்துக்குப் புறம்பாக நான் எதுவும் செய்யவில்லை. அதனால் கட்சி நிர்வாகிகள், எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் மனம் உடைந்துவிட வேண்டாம். கடவுள் மீதும், நீதித் துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பழிதீர்க்கும் அரசியலுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story