போக்குவரத்து விதிமீறல் கட்டண உயர்வு எதிரொலி: ஆட்டோ உரிமையாளர், டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்


போக்குவரத்து விதிமீறல் கட்டண உயர்வு எதிரொலி: ஆட்டோ உரிமையாளர், டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்
x
தினத்தந்தி 4 Sep 2019 9:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:41 PM GMT)

போக்குவரத்து விதிமீறல் கட்டண உயர்வு எதிரொலியாக, ஆட்டோ உரிமையாளர், டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.

புவனேஸ்வரம்,

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான அபராத தொகை உயர்வு, கடந்த 1-ந் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்காக ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டிய டிரைவரை போக்குவரத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், குற்றங்களை பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் ஆட்டோ உரிமையாளருக்கும், டிரைவருக்கும் அபராதம் விதித்தனர்.

பொது விதியை மீறியதற்கு ரூ.500, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், பெர்மிட் நிபந்தனையை மீறியதற்கு ரூ.10 ஆயிரம், மது அருந்திவிட்டு ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், ஒலி மாசு ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம், உரிமம் இல்லாதவரை ஆட்டோ ஓட்ட அனுமதித்ததற்கு ரூ.5 ஆயிரம், வாகன பதிவு செய்யாமல் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியதற்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.


Next Story