கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் அமலாக்கத்துறை காவல்


கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:15 AM IST (Updated: 5 Sept 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் சொந்தமான வீடுகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி சிக்கியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நேற்று மாலை டி.கே.சிவக்குமார், டெல்லி சிறப்பு கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குகர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டி.கே.சிவக்குமாரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை 14 நாட்கள் அமலாக்கத்துறையின் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் டி.கே.சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, தியான் கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.கே.சிவக்குமாரை வருகிற 13-ந் தேதி வரை 9 நாட்கள் அமலாக்கத்துறை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Next Story