நிலவை நெருங்கியது, சந்திரயான்-2 லேண்டர்
சந்திரயான்-2 லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.
நிலவை பூமிக்கு வரச்சொல்லித்தான் காலம் காலமாக கவிஞர்கள் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்கள்.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று நிலவைக் காட்டித்தான் நமது தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டினார்கள்.
ஆனால் அந்த நிலவிலேயே முதன் முதலாக கால் பதித்து சாதனை படைத்தார் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங்.
அந்த நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி, தரை இறங்க வைத்து வரலாறு படைத்தன வல்லரசு நாடுகளான ரஷியாவும், அமெரிக்காவும், சீனாவும்.
இந்த வரிசையில் இந்தியாவும் கால் பதித்து வரலாறு படைக்கப்போகிறது.
ஆனால் இந்தியா படைக்கப்போவது புதிய வரலாறு.
ஆமாம், இதுவரை உலகின் எந்தவொரு வல்லரசு நாடும்கூட தனது விண்கலத்தை தரை இறங்க வைத்திடாத நிலவின் தென் துருவப்பகுதியில்தான், இந்தியா தனது விண்கலத்தை தரை இறக்கப்போகிறது.
இந்தியா, அந்த சாதனையை செய்துதான் புதிய வரலாறு படைக்கப்போகிறது.
இதற்காக நமது விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் விஞ்ஞானிகள் ரூ.978 கோடி செலவில் நிறைவேற்றுவதற்காக உருவாக்கிய திட்டம்தான், சந்திரயான்-2 விண்கல திட்டம்.
3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஆர்பிட்டரையும் (சுற்று வட்டக்கலன்), விக்ரம் என்ற லேண்டரையும், பிரக்யான் என்ற ரோவரையும் கொண்டதாகும்.
கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலமானது, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, உலக நாடுகளையெல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்தது.
முதலில் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது.
அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
ஏறத்தாழ ஒரு மாத கால விண்வெளிப்பயணத்தைத் தொடர்ந்து சந்திரயான்-2 விண்கலம், ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது ஒரு மைல்கல்.
அதன் பின்னர் தொடர்ந்து 5 முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையை மாற்றி அமைத்தனர். இது அத்தனையும் சவாலான பணிகள்தான்.
ஆனால் நமது விஞ்ஞானிகள் தங்களது பழுத்த அனுபவத்தையும், நேர்த்தியான செயல்திறனையும் ஒன்றாக கரம் கோர்க்கச்செய்து இதைச் செய்தனர்.
செப்டம்பர்-2.
-இந்த நாள் சந்திரயான்-2 பயணத்தில் மற்றொரு மைல் கல்.
அன்று மதியம் 1.15 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக்கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. இதன் பின்னணியில் இரவு பகல் பாராமல் உழைத்த நமது விஞ்ஞானிகள் முயற்சியும், உழைப்பும் இருந்தது.
ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்ததை அடுத்து, அது நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.
3-ந் தேதியன்று காலை 8.50 மணிக்கு பெங்களூரு அருகே அமைந்துள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உள் உந்து விசைமுறையைப் பயன்படுத்தி, விக்ரம் லேண்டரை நிலவுக்கு 104 கி.மீ. அருகே கொண்டு வந்தனர்.
நேற்று அதிகாலை 3.42 மணிக்கு மீண்டும் இங்குள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் 9 வினாடிகள் உள் உந்து விசைமுறையை பயன்படுத்தி, நிலவுக்கு 35 கி.மீ. அருகில் விக்ரம் லேண்டரை கொண்டு வந்து உள்ளனர். இதுதான் விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதையை மாற்றி அமைத்த கடைசி நிகழ்வு.
இதன் மூலம் நிலவை நெருங்கியது, சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர். தற்போது அது நிலவுக்கு 35 கி.மீ. அருகிலும், 101 கி.மீ. தொலைவிலும் சுற்றி வருகிறது.
அ ன்று அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் விக்ரம் லேண்டரை இன்னும் நிலவுக்கு பக்கமாய் விஞ்ஞானிகள் இறக்குவார்கள்.
அதிகாலை 2.30 மணிவாக்கில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும்.
அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்னும் ரோவர் ரோபோ காலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிக்குள், முட்டையில் இருந்து குஞ்சு வெளிவருவது போன்று மந்தகாசமாய் வெளியே வந்து நிலவின் தென் துருவப்பகுதியில் மெல்ல இறங்கி ஊர்ந்து செல்லும்.
நிலவின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தரை இறங்கும் நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடி, நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 60 உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் காணப்போகிறார்.
ஒட்டுமொத்த உலகமும் வியக்கத்தான் போகிறது, இந்தியாவின் சாதனையைப் பார்த்து!
சிவன் என்ற தமிழரின் தலைமையில் இஸ்ரோ இயங்குகிறபோது, இந்த சாதனை நடப்பது நமக்கெல்லாம் கூடுதல் பெருமிதம்தான்.
Related Tags :
Next Story