இஸ்ரோ லேண்டருடனான தொடர்பைத்தான் இழந்துள்ளதேத் தவிர, இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை -வெங்கையா நாயுடு


இஸ்ரோ லேண்டருடனான தொடர்பைத்தான் இழந்துள்ளதேத் தவிர, இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை -வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 7 Sept 2019 4:42 PM IST (Updated: 7 Sept 2019 4:42 PM IST)
t-max-icont-min-icon

விக்ரம் லேண்டருடனான தொடர்பைத்தான் இஸ்ரோ இழந்துள்ளதேத் தவிர, 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும்,  பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது:-

நம்பிக்கை இழக்க ஒன்றுமே இல்லை. லேண்டருடனான தொடர்பைத்தான் இஸ்ரோ இழந்துள்ளதே தவிர, 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்காள முதல்-மந்திரியும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டில் கூறி உள்ளதாவது:-

இந்தியாவில் விண்வெளி அறிவியலுக்கு வித்திட்ட அறிஞர்களுக்கு இந்த முயற்சி சமர்ப்பணம். நம் விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இஸ்ரோ குழுவினர் சந்திரயான் -2 திட்டத்துக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  நேற்று மம்தா பானர்ஜி சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்பி கனிமொழி கூறி இருப்பதாவது:-

இந்த முறை 95% பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை 100% பணியும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

இஸ்ரோவுக்கும் அதன் தலைவர் சிவனுக்கும் நன்றி. தேசம் இந்த சாதனையை நினைத்து பெருமிதம் கொள்கிறது. இஸ்ரோவின் பயணத்துக்குப் பின்னால் 100 கோடி மக்கள் துணை நிற்கின்றனர்"  என கூறி உள்ளார்.

சந்திரயான்-2 இறுதிக்கட்டத்தில் வெற்றியை எட்டாவிட்டாலும் தெற்காசியாவிற்கு பெருமை சேர்க்கும் பயணம் அது என  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் மாதவன் கூறி உள்ளதாவது:-

சந்திரயான்-2 முயற்சிக்கு மரியாதையும் பாராட்டையும் தெரிவித்தார். இந்த முயற்சி என்றுமே நமது வரலாற்றில் செதுக்கப்படும். சந்திரனை சுற்றிவரும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இன்னும் சுற்றி வருகிறது. 

எனவே இந்த மிஷன் 90% வெற்றியே என்று தனது ஆதரவை டுவிட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் போஸ்ட் செய்துள்ளார்.

Next Story