மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மரணம்: உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி


மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மரணம்: உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 8 Sep 2019 11:30 PM GMT (Updated: 8 Sep 2019 9:37 PM GMT)

மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

முதுபெரும் சட்ட வல்லுனரும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.

அவர் கடந்த சில மாதங்களாகவே வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

வரும் 14-ந் தேதி தனது 96-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், ராம் ஜெத்மலானி மரணம் அடைந்து விட்டார்.

இவர் குற்ற வழக்குகளில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர்.

அத்துடன் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது மந்திரிசபையில் இவர் சட்டம் மற்றும் நீதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

ஆனால் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதே வாஜ்பாயை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தலைவராகவும் பதவி வகித்தார்.

ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி காலமானதில் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பொதுப்பிரச்சினைகளில் தனிச்சிறப்பான வகையில் கருத்துகளை தெரிவித்து வந்தார். அவரது மறைவால் நாடு தலைசிறந்த வக்கீலை, மிகப்பெரும் புலமை வாய்ந்த ஒருவரை, அறிவாளி ஒருவரை இழந்து விட்டது” என கூறப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது இரங்கல் செய்தியில், “நாடு அறிவார்ந்த தலைவர்களில் ஒருவரை, சிறந்த வக்கீலை, மிகப்பெரிய அறிவுஜீவியை, தேசபக்தரை இழந்து விட்டது. தனது கடைசி சுவாசம் வரை அவர் சுறுசுறுப்பாக இருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “ ராம்ஜெத்மலானி நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், துணிச்சலானவர், எந்த ஒரு விஷயத்திலும் தைரியமாக தன்னை வெளிப்படுத்துவதில் இருந்து அவர் ஒருபோதும் விலகிச்சென்றது இல்லை. அவரது மறைவால் நாடு ஒரு சிறந்த வக்கீலை, பொதுவாழ்வில தனித்து விளங்கியவரை, நீதிமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்தவரை இழந்து விட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

ராம் ஜெத்மலானியின் உடலுக்கு அவர் நேரில் அஞ்சலியும் செலுத்தினார்.

மறைந்த ராம்ஜெத்மலானி பாகிஸ்தானில் உள்ள ஷிகார்பூரில் 1923-ல் பிறந்தவர், தனது 17-வது வயதிலேயே சட்டம் படித்து முடித்து வக்கீல் தொழில் செய்ய ஆரம்பித்தவர் ஆவார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகி வாதிட்டவர்; இதே போன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

அத்வானி மீதான ஹவாலா வழக்கு, அமித் ஷா மீதான சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கு, கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு, எடியூரப்பா மீதான சுரங்க ஊழல் வழக்கு போன்றவற்றில் ஆஜராகி வாதிட்டவர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ராம் ஜெத்மலானிக்கு துர்கா, ரத்னா என இரு மனைவிகள்.

ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானியும், மகள் ராணி ஜெத்மலானியும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆவர்.

ராம் ஜெத்மலானியின் உடல், டெல்லி லோதி ரோட்டில் உள்ள தகன மையத்துக்கு மாலை 4.30 மணிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.


Next Story