ஜம்மு காஷ்மீர்: மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்


ஜம்மு காஷ்மீர்: மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2019 5:14 AM GMT (Updated: 10 Sep 2019 5:14 AM GMT)

ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதாம்பூர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்ரோலி பகுதி வழியாக செல்லும் ஜம்மு  ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை  மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.  பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறிய மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரான கயே சிங் என்பவர் கூறும் போது, “ எங்கள் பள்ளியில்  16 ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில், வெறும் 3 ஆசிரியர்கள் மட்டுமே  உள்ளனர். அனைத்து வகுப்பிற்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் இல்லாததால், எங்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.  உயர் அதிகாரிகளிடம் பல முறை எடுத்துச்சென்ற போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.  

கல்வித்துறை கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். எங்களின் தேவைகள் பூர்த்தி ஆகும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். 


Next Story