விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன : இஸ்ரோ


விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன : இஸ்ரோ
x
தினத்தந்தி 10 Sep 2019 5:32 AM GMT (Updated: 10 Sep 2019 5:32 AM GMT)

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், குழந்தையை தொட்டிலில் போடுவது போன்று மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது. 
இந்த நிலையில், இன்று காலை இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், “சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. எனினும், தற்போது வரை விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story