டெல்லியில் நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2019 5:33 PM IST (Updated: 11 Sept 2019 5:33 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மத்திய மந்திரி நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன  ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும் சில மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி, எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மத்திய சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவலர்கள் வைத்துள்ள தடுப்பின் மீது இரு சக்கர வாகனத்தை தூக்கி வீசி காங்கிரஸ் கட்சியினர் எதிப்பு தெரிவித்தனர். இதனால்  ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story